வியாழன், 20 செப்டம்பர், 2012

Some verses of Thiru Gnaanasambandhar - Vol II



திருமுன்பாட திருமுறைப்பாடல்கள் சில





----------------------------------------------------------------
          INDEX

         1. எரித்தவன் முப்புரம்

         2. அவ்வினைக்கு இவ்வினை

         3. ஒருருவாயினை

         4. மந்திரமாவது நீறு

         5. வேயுறு தோளிபங்கன்

         6. இடரினும் தளரினும்

         7. துஞ்சலும் துஞ்சலிலாத

         8. மண்ணில் நல்லவண்ணம்

         9. காதலாகிக் கசிந்து

        10. யமாமா நீ யாமாமா

        11. மகயர்க்கரசி வளவர்கோன்

        12. விங்குவிளை கழனிமிகு

        13. வாழ்க அந்தணர்
----------------------------------------------------------------
1.113 திருவல்லம்

பண் - வியாழக்குறிஞ்சி



எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்

தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்

விரித்தவன் வேதங்கள் வேறுவேறு

தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே



தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்

தூயவன் தூமதி சூடியெல்லாம்

ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்

சேயவன் உறைவிடந் திருவல்லமே


பார்த்தவன் காமனைப் பண்பழியப்

போர்த்தவன் போதகத் தின்னுரிவை

ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று

சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே


கொய்தஅம் மலரடி கூடுவார்தம்

மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்

பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்

செய்தவன் உறைவிடந் திருவல்லமே


சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்

நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்

தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே

சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே


பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்

உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று

விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று

சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே


இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்

ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்

நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே

திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே


பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய

அரியவன் அருமறை யங்கமானான்

கரியவன் நான்முகன் காணவொண்ணாத்

தெரியவன் உறைவிடந் திருவல்லமே


அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்

குன்றிய அறவுரை கூறாவண்ணம்

வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்

சென்றவன் உறைவிடந் திருவல்லமே


கற்றவர் திருவல்லங் கண்டுசென்று

நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன

குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்

பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வல்லநாதர், தேவியார் - வல்லாம்பிகையம்மை.


திருச்சிற்றம்பலம்

--0--

1.116 திரு நீலகண்டம்

பண் - வியாழக்குறிஞ்சி



திருக்கொடிமாடச்செங்குன்றம்


அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்

ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்

தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்

விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்

சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்

புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே

கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்

திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்

கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்

செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே

உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்

செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே

திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து

தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்

தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்

சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்

பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்

தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்


பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்

இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்

திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே


இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்

கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.




திருச்சிற்றம்பலம்

--0--

1.128 திருவெழுகூற்றிருக்கை

பண் - வியாழக்குறிஞ்சி





ஓருரு வாயினை மானாங் காரத்

தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்

படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை

இருவரோ டொருவ னாகி நின்றனை


ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்

முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி

காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை

இருநதி யரவமோ டொருமதி சூடினை

ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்


நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம்

ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்

திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை

ஒருதனு இருகால் வளைய வாங்கி

முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்


கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை

ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்

முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்

ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ

டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து


நான்மறை யோதி ஐவகை வேள்வி

அமைத்தா றங்க முதலெழுத் தோதி

வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்

பிரமபுரம் பேணினை

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை


இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை

பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை

பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த

தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை



வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை

ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்

விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை

முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை


ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்

ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை

எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை

ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்

மறை முதல் நான்கும்


மூன்று காலமுந் தோன்ற நின்றனை

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்

மறுவிலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்


அனைய தன்மையை யாதலின் நின்னை

நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே.



திருச்சிற்றம்பலம்

--0--












2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்

பண் - காந்தாரம்


 

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே


வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே


அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே


இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே


மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட

கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு

அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே


ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே



திருச்சிற்றம்பலம்

--0--

2.85 கோளறு திருப்பதிகம்

பண் - பியந்தைக்காந்தாரம்



வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

       மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

       சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க

       எருதேறி யேழை யுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

       உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்

       உடனாய நாள்க ளவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து

       உமையோடும் வெள்ளை விடைமேன்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

       திசை தெய்வ மானபலவும்

அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே



மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து

       மறையோது மெங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்

       கொடுநோய்க ளான பலவும்

அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்

       விடையேறும் நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு

       மிகையான பூத மவையும்

அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்

       மடவாள் தனோடு முடனாய்

நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்

       உளமே புகுந்த அதனால்

கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்

       கொடுநாக மோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக

       விடையேறு செல்வ னடைவார்

ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்

       வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல


       அடியா ரவர்க்கு மிகவே


வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து

       மடவாள் தனோடும் உடனாய்

வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்

       உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்

       இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


பலபல வேடமாகும் பரனாரி பாகன்

       பசுவேறும் எங்கள் பரமன்

சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்

       வருகால மான பலவும்

அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே



கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு

       குணமாய வேட விகிர்தன்

மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்

       உளமே புகுந்த அதனால்

புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்

       திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல

       அடியா ரவர்க்கு மிகவே


தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி

       வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

       மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து

       நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

       அரசாள்வர் ஆணை நமதே

திருச்சிற்றம்பலம்

--0--


3. 004 திருவாவடுதுறை

பண் - காந்தாரபஞ்சமம் ( நாலடி மேல்வைப்பு )




இடரினுந் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே


வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்

வீழினும் உனகழல் விடுவேனல்லேன்

தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்

போழிள மதிவைத்த புண்ணியனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே


நனவினுங் கனவினும் நம்பாவுன்னை

மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்

புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த

கனலெரி யனல்புல்கு கையவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்

அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்

கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்

மும்மதிள் எரியெழ முனிந்தவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


கையது வீழினுங் கழிவுறினுஞ்

செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்

கொய்யணி நறுமலர் குலாயசென்னி

மையணி மிடறுடை மறையவனே


   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே



வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்

எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா

ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த

சந்தவெண் பொடியணி சங்கரனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


வெப்பொடு விரவியோர் வினைவரினும்

அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா

ஒப்புடை யொருவனை உருவழிய

அப்படி அழலெழ விழித்தவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்

சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்

ஏருடை மணிமுடி இராவணனை

ஆரிடர் படவரை யடர்த்தவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே


உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்

ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்

கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்

அண்ணலும் அளப்பரி தாயவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே


பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்

அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்

புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்

பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்

   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே


அலைபுனல் ஆவடு துறையமர்ந்த

இலைநுனை வேற்படை யெம்மிறையை

நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன

விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்

   வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்

   நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே



திருச்சிற்றம்பலம்


--0--




















 








3. 022 திருப்பஞ்சாக்கரப்பதிகம்

பண் - காந்தாரபஞ்சமம்





துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்

றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே


மந்திர நான்மறை யாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்

கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே


ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்

ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்

தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்

ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே




நல்லவர் தீயரெ னாது நச்சினர்

செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ

கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்

தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே


கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத்

தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்

தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை

அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே


தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்

அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே


வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பின்னை நாடொறும்

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே


வண்டம ரோதி மடந்தை பேணின

பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன

தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்

கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே


கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்

சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்

பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்

கார்வண மாவன அஞ்செ ழுத்துமே


புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்

சித்தத் தவர்கள் தெளிந்து தேறின

வித்தக நீறணி வார்வி னைப்பகைக்

கத்திர மாவன அஞ்செ ழுத்துமே


நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை

கற்றவன் காழியர் மன்னன் உன்னிய

அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்

துற்றன வல்லவர் உம்ப ராவரே



திருச்சிற்றம்பலம்

--0--





3. 024 திருக்கழுமலம்

பண் - கொல்லி





மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்

கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே


போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்

தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்

காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்

பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே


தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்

வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்

கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்

பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே


அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே

நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்

கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்

பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே


அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே

விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்

கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்

பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே


மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல

கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்

சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்

பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே


குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே

நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்

கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்

பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே


அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட

நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே

கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்

பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே


நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்

அடியொடு முடியறி யாவழல் உருவினன்

கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்

பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே


தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்

ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்

காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்

பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே


கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்

பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை

அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்

விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே



திருச்சிற்றம்பலம்

--0--
















3. 049 நமச்சிவாயத் திருப்பதிகம்

பண் - கௌசிகம்





காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி

ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம் நமச்சி வாயவே


நம்பு வாரவர் நாவி னவிற்றினால்

வம்பு நாண்மலர் வார்மது வொப்பது

செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்

நம்பன் நாமம் நமச்சி வாயவே


நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்

தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்

தக்க வானவ ராத்தகு விப்பது

நக்கன் நாமம் நமச்சி வாயவே



இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்

நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்

நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி

நயனன் நாமம் நமச்சி வாயவே


கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்

இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்

நல்லார் நாமம் நமச்சி வாயவே


மந்த ரம்மன பாவங்கள் மேவிய

பந்த னையவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சி வாயவே


நரக மேழ்புக நாடின ராயினும்

உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்

விரவி யேபுகு வித்திடு மென்பரால்

வரதன் நாமம் நமச்சி வாயவே


இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்

தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்

மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை

நலங்கொள் நாமம் நமச்சி வாயவே


போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்

பாதந் தான்முடி நேடிய பண்பராய்

யாதுங் காண்பரி தாகி அலந்தவர்

ஓதும் நாமம் நமச்சி வாயவே


கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்

வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்

விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்

நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே


நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்

சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்

சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்

பந்த பாசம் அறுக்கவல் லார்களே

திருச்சிற்றம்பலம்

--0--




3.117 சீர்காழி - திருமாலைமாற்று

பண் - கௌசிகம்





யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.


யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.



தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா

மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.


நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே

மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.


யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ

வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.


மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே

யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.


நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே

நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண.


னேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா

காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.


காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ

பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.


வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.


நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா

காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.



திருச்சிற்றம்பலம்


--0--





3.120 திருஆலவாய்

பண் - புறநீர்மை



மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

       வரிவளைக் கைம்மட மானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி

       பணிசெய்து நாடொறும் பரவப்

பொங்கழ லுருவன் பூதநா யகனால்

       வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த

       ஆலவா யாவதும் இதுவே.


வெற்றவே யடியார் அடிமிசை வீழும்

       விருப்பினன் வெள்ளைநீ றணியுங்

கொற்றவன் றனக்கு மந்திரி யாய

       குலச்சிறை குலாவி நின்றேத்தும்

ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்

       உலகினில் இயற்கையை யொழிந்திட்

அற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற

       ஆலவா யாவதும் இதுவே.


செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்

       சிவன்திரு நீற்றினை வளர்க்கும்

பந்தணை விரலாள் பாண்டிமா தேவி

       பணிசெயப் பாரிடை நிலவுஞ்

சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்

       கம்மலர் வன்னி

அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல்

       ஆலவா யாவதும் இதுவே.


கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்

       அடியவர் தங்களைக் கண்டால்

குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங்

       கோபுரஞ் சூழ்மணிக் கோயில்

மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்

       வன்னிவண் கூவிள மாலை

அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல்

       ஆலவா யாவதும் இதுவே.


செய்யதா மரைமேல் அன்னமே யனைய

       சேயிழை திருநுதற் செல்வி

பையர வல்குற் பாண்டிமா தேவி

       நாடொறும் பணிந்தினி தேத்த

வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான்

       விரிகதிர் மழுவுடன் தரித்த

ஐயனார் உமையோ டின்புறு கின்ற

       ஆலவா யாவதும் இதுவே.




நலமில ராக நலமதுண் டாக

       நாடவர் நாடறி கின்ற

குலமில ராகக் குலமதுண் டாகத்

       தவம்பணி குலச்சிறை பரவுங்

கலைமலி கரத்தன் மூவிலை வேலன்

       கரியுரி மூடிய கண்டன்

அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல்

       ஆலவா யாவதும் இதுவே.


முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும்

       நீறுந்தன் மார்பினின் முயங்கப்

பத்தியார் கின்ற பாண்டிமா தேவி

       பாங்கொடு பணிசெய நின்ற

சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே

       சுடர்மர கதமடுத் தாற்போல்

அத்தனார் உமையோ டின்புறு கின்ற

       ஆலவா யாவதும் இதுவே.


நாவணங் கியல்பாம் அஞ்செழுத்

       தோதி நல்லராய் நல்லியல் பாகுங்

கோவணம் பூதி சாதனங் கண்டால்

       தொழுதெழு குலச்சிறை போற்ற

ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோள்

       இருபதும் நெரிதர வூன்றி

ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல்

       ஆலவா யாவதும் இதுவே.





மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும்

       மணிமுடிச் சோழன்றன் மகளாம்

பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி

       பாங்கினாற் பணிசெய்து பரவ

விண்ணுளார் இருவர் கீழொடு மேலும்

       அளப்பரி தாம்வகை நின்ற

அண்ணலார் உமையோ டின்புறு கின்ற

       ஆலவா யாவதும் இதுவே.


தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந்

       தொழுதுதன் குணத்தினைக் குலாவக்

கண்டுநா டோ றும் இன்புறு கின்ற

       குலச்சிறை கருதிநின் றேத்தக்

குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள்

       குறியின்கண் நெறியிடை வாரா

அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த

       ஆலவா யாவதும் இதுவே.


பன்னலம் புணரும் பாண்டிமா தேவி

       குலச்சிறை யெனுமிவர் பணியும்

அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன்

       திருவடி யாங்கவை போற்றிக்

கன்னலம் பெரிய காழியுள் ஞான

       சம்பந்தன் செந்தமி ழிவைகொண்

டின்னலம் பாட வல்லவர் இமையோர்

       ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.

திருச்சிற்றம்பலம்

--0--

3.72 திருமாகறல் - திருவிராகம்

பண் - சாதாரி




விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்

மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்

கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்

செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.


கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்

மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்

இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்

அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.


காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்

மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்

தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்

பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.


இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே

மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்

கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே

நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.


துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்


மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்

வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்

நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.


மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்

இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்

மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே

உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.


வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மேல்வினைகள் வீட்டலுறுவீர்

மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்

கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்

ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.


தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே

மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்

பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்

பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.


தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்

பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்

சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்

ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.


காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்

மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்

நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்

ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.


கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்

அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்

மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே

உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர்

தேவியார் - புவனநாயகியம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--































 




  3.054 திருப்பாசுரம்
பண் - கௌசிகம்


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே.


அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்

எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங்

கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்

பெரிய ராரறி வாரவர் பெற்றியே.


வெந்த சாம்பல் விரையெனப் பூசியே

தந்தை யாரொடு தாயிலர் தம்மையே

சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்

எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.


ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்

கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா

கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை

தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.


ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்

சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி

மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.


ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்

பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்

கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்

நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.


கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல

படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு

முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி

அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே.


வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்

ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்

பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த

சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.


பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப்

பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி

நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்

போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.



மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்

பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக்

காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த

ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.



அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்

தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்

பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்

பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.


நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல

எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்

பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்

வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.


திருச்சிற்றம்பலம்

--0--

அன்புடன்

செல்வமுனி இல்லத்தார்