செவ்வாய், 30 ஏப்ரல், 2013

Ever Existing Substance



பழம்பொருள்



மூச்சதனை உள்நிறுத்தி மூக்குநுனி பார்த்திருந்து

மூலப்பண் டாரமவன் முகவரியைத் தேர்ந்திருந்தேன்

மூலத்தின் மூலமவன் முகவரியில் நில்லாது

ஊனுயிரை ஊடறுத்து உலவுவதும் உணர்வேனோ


உணர்விட்ட உண்மைப்பொருள் உட்கலந்து உவகைதரும்

புனல்இட்ட மணியொளிர்ந்து புனல்ஒளிரும் நிறம்மாற்றும்

உடையிட்ட ஊடெனவும் பாவெனவும் நூல்வளரும்

அன்னவகை யப்பொருளின் இயல்புணர மாட்டேனோ


மாட்டாமை தனைமாற்றி மயக்கறுத்து  உய்வளிக்கும் 

இருப்பியக்கம் இரண்டினுக்கும் இடமளித்து உலகியற்றும் 

ஒண்பொருளின்  உயர்நோக்கை ஓங்கிவளர் அருட்திறத்தை

உளம்கொள்ள வொண்ணாது உன்மத்தன் ஆவேனோ


ஆவதுவும் அழிவதுவும் வாலறிவன் ஆக்கினையால்

வீழ்வதுவும் வாழ்வதுவும் வல்வினையின் ஊட்டுதலால்

பூப்பதுவும் பூத்தமலர்ப்  புனைவதுவும் அவன்தோளில்

என்றிருந்து தனிப்பொருளின் தண்ணடிகள் காண்பேனோ


கண்டுணர்ந்து உய்த்திருக்க கருவூலம் உள்ளிருக்க

தூய்மையினும்  தூய்மையென திகழ்கின்ற சோதியினை

கங்குபகல் காலமுற்றும் கலந்திருந்து களிப்பேனோ

கட்புலனில் அகப்பட்டு கதிமறந்து நிற்பேனோ


நின்று நிலைத்தப்பொருள் உயிர்த்துகளில் உலவுபொருள்

பற்று அறுத்தப்பொருள் பரஞ்ஞானம் தந்தபொருள்

கற்று தெளிந்தவர்க்கு கலவிகொள்ள உற்றபொருள்

வேற்று மனத்தினனாய் உற்றதனைத் தெளிவேனோ


தெளிந்துவளர் சித்தத்தில் ஜீவியப் பொருளெனவும்

விரிந்தநற் பேரறிவாய் விளைந்த நல்முத்தெனவும்

மலர்ந்தசெம் மனங்களிலே மாசற்ற சோதியுமாய்

விளங்குமவ் உயர்ப்பொருளை கற்றென்று தேர்வேனோ


தேர்ந்தநற் பொருளெனவே செப்பிடுவர்   அறம்நின்றோர்

சேர்ந்துறையும் காலமுற்றும் தீதறவே காத்துநிற்கும்

நேர்ந்தவெவ் வினையதனை வேரறுத்து நேர்படுத்தும்

சாரமாம் சித்பொருளை சார்ந்திருக்கப் பயில்வேனோ


பயின்றிங்கு பெற்றதெல்லாம் வானுலவும் பேரண்டம்

தெளிந்தவுயிர்  உணர்ந்ததுவோ நித்தியப் பேரமைதி

உழன்றுதினம் திரியுமனம் ஒன்றுமிடம் கண்டுணர்ந்து

சத்சித்து ஆனந்தத்தில் தனியிடத்து அமர்வேனோ


தனியமர்ந்து அறிந்தனரே நற்பொருளை நாடிநின்றோர்

திறம்வியந்து போற்றினரே அஃதுணர்த்தும் பெருநெறியை

சிரம்தாண்டி நின்றிலங்கும் சின்மயமாம் சித்பொருளை

புலன்தாண்டி உணர்வதற்கு உற்றநிலை வாய்த்திடுமோ


வாய்த்தவுயிர்த்    துகளதனில் உடற்கூற்றை முடிச்சிட்டு

தூயத்தபருப் பொருளதனில் சூக்குமங்கள் பிணைத்திருத்தி

வேய்த்தவிழுப் பொருளெனவே விளங்குகின்ற விண்ணரசை

காய்த்தமனம் கனிந்தேத்தி கதியுறுமோ என்னுயிர்மூச்சு




--0--