வியாழன், 20 செப்டம்பர், 2012

Some verses of Thiru Gnanasambandhar - Vol I


திருமுன்பாட திருமுறைப்பாடல்கள் சில



----------------------------------------------------------------

          INDEX


         1. தோடுடைய செவியன்


         2. சடையா யெனுமால்


         3. கண்காட்டு நுதலானுங்


         4. உண்ணாமுலை உமையாளொடும்


         5. மடையில் வாளை


         6. அந்தமும் ஆதியு மாகிய


         7. துணிவளர் திங்கள்


         8. மறையுடையாய் தோலுடையாய்


         9. பூத்தேர்ந் தாயன கொண்டுநின்


        10. வாசி தீரவே


        11. நன்றுடையானைத் தீயதிலானை


        12. பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்


        13. உற்றுமை சேர்வது மெய்யினையே


----------------------------------------------------------------






1.1 திருப்பிரமபுரம்

பண் - நட்டபாடை

திருபிரமபுரம்


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு

வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்

கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்

பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி

ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்

ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்

பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்

உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்

மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்

பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன

அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்

கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்

பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே




மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி

இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்

கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்

பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த

உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்

கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்

பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த

உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்

துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்

பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்

நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்

வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்

பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா

ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்

மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்

பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய

பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை

ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த

திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே



திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.

திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.



திருச்சிற்றம்பலம்

--0--






2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம்

பண் - இந்தளம்

திருமருகல்


சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்

விடையா யெனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே


சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்

முந்தா யெனுமால் முதல்வா எனுமால்

கொந்தார் குவளை குலவும் மருகல்

எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே


அறையார் கழலும் மழல்வா யரவும்

பிறையார் சடையும் முடையாய் பெரிய

மறையார் மருகல் மகிழ்வா யிவளை

இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே


ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்

பலிநீ திரிவாய் பழியில் புகழாய்

மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை

மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே


துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன

மணிநீ லகண்ட முடையாய் மருகல்

கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்

அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே








பலரும் பரவப் படுவாய் சடைமேல்

மலரும் பிறையொன் றுடையாய் மருகல்

புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்

தலரும் படுமோ அடியா ளிவளே


வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா

எழுவாள் நினைவாள் இரவும் பகலும்

மழுவா ளுடையாய் மருகல் பெருமான்

தொழுவா ளிவளைத் துயராக் கினையே


இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்

துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்

வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்

அலங்கல் லிவளை அலராக் கினையே


எரியார் சடையும் மடியும் மிருவர்

தெரியா ததோர்தீத் திரளா யவனே

மரியார் பிரியா மருகற் பெருமான்

அரியாள் இவளை அயர்வாக் கினையே


அறிவில் சமணும் மலர்சாக் கியரும்

நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்

மறியேந் துகையாய் மருகற் பெருமான்

நெறியார் குழலி நிறைநீக் கினையே


வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்

உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்

இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்

வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே



திருச்சிற்றம்பலம்

--0--














2.48 திருவெண்காடு

பண் - சீகாமரம்

திருவெண்காடு


கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்

பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்

பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே


பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை

வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்

வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே


மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி

எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்

பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்

விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே


விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்

மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று

தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்

கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே


வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்

மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்

மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்

ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே









தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்

ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்

பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே


சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்

அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய

மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்

முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே


பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த

உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்

கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க

விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே


கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்

ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்

வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்

றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே


போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்

பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்

வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்

றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே


தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்

விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்

பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்

மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்

தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--







1.10 திரு அண்ணாமலை

பண் - நட்டபாடை

திருவண்ணாமலை


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே


தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற

ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்

பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே


பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்

சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்

ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்

காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே


உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்

எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்

முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்

அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே


மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி

அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்

உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்

குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே





பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்

பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்

கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி

உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே


கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்

நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள

எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல

அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே


ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்

பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து

வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை

அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே


விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்

கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்

அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்

தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே


வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்

மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்

ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்

கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே


வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்

அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்

கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான

சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே


இது நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,

தேவியார் - உண்ணாமுலையம்மை




திருச்சிற்றம்பலம்

--0--







1.23 திருக்கோலக்கா

பண் - தக்கராகம்





மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக் காவுளான்

சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்

உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ


பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி

கொண்டான் கோலக் காவு கோயிலாக்

கண்டான் பாதங் கையாற் கூப்பவே

உண்டான் நஞ்சை உலக முய்யவே


பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்

கோணற் பிறையன் குழகன் கோலக்கா

மாணப் பாடி மறைவல் லானையே

பேணப் பறையும் பிணிக ளானவே


தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்

மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்

குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே


மயிலார் சாயல் மாதோர் பாகமா

எயிலார் சாய எரித்த எந்தைதன்

குயிலார் சோலைக் கோலக் காவையே

பயிலா நிற்கப் பறையும் பாவமே



வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்

கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்

கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்

அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே


நிழலார் சோலை நீல வண்டினங்

குழலார் பண்செய் கோலக் காவுளான்

கழலால் மொய்த்த பாதங் கைகளாற்

தொழலார் பக்கல் துயர மில்லையே


எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை

முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்

குறியார் பண்செய் கோலக் காவையே

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே


நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்

ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்

கூற்ற முதைத்த குழகன் கோலக்கா

ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே


பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்

உற்ற துவர்தோ யுருவி லாளருங்

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்

பற்றிப் பரவப் பறையும் பாவமே


நலங்கொள் காழி ஞான சம்பந்தன்

குலங்கொள் கோலக் காவு ளானையே

வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்

உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--









1.39 திருவேட்களம்

பண் - தக்கராகம்
திருவேட்களம்


அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்

       ஆரழ லங்கை அமர்ந்திலங்க

மந்த முழவம் இயம்ப

       மலைமகள் காண நின்றாடிச்

சந்த மிலங்கு நகுதலை கங்கை

       தண்மதியம் மயலே ததும்ப

வெந்தவெண் ணீறு மெய்பூசும்

       வேட்கள நன்னக ராரே


சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்

       சங்கவெண் டோ டு சரிந்திலங்கப்

புடைதனிற் பாரிடஞ் சூழப்

       போதரு மாறிவர் போல்வார்

உடைதனில் நால்விரற் கோவண ஆடை

       உண்பது மூரிடு பிச்சைவெள்ளை

விடைதனை ஊர்தி நயந்தார்

       வேட்கள நன்னக ராரே


பூதமும் பல்கண மும்புடை சூழப்

       பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்

சீதமும் வெம்மையு மாகிச்

       சீரொடு நின்றவெஞ் செல்வர்

ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை

       உள்ளங் கலந்திசை யாலெழுந்த

வேதமும் வேள்வியும் ஓவா

       வேட்கள நன்னக ராரே


அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்

       அமையவெண் கோவணத் தோடசைத்து

வரைபுல்கு மார்பி லோராமை

       வாங்கி யணிந் தவர்தாந்

திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்

       தேனலங் கானலில் வண்டுபண்செய்ய

விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த

       வேட்கள நன்னக ராரே


பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்

       பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த

பெண்ணுறு மார்பினர் பேணார்

       மும்மதில் எய்த பெருமான்

கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்

       கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்

வெண்ணிற மால்விடை அண்ணல்

       வேட்கள நன்னக ராரே


கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்

       கண்கவ ரைங்கணை யோனுடலம்

பொறிவளர் ஆரழ லுண்ணப்

       பொங்கிய பூத புராணர்

மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்

       மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை

வெறிவளர் கொன்றையந் தாரார்

       வேட்கள நன்னக ராரே


மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை

       மாமலை வேந்தன் மகள்மகிழ

நுண்பொடிச் சேர நின்றாடி

       நொய்யன செய்யல் உகந்தார்

கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்

       காலனைக் காலாற் கடிந்துகந்தார்

வெண்பொடிச் சேர்திரு மார்பர்

       வேட்கள நன்னக ராரே




ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்

       அமுத மமரர்க் கருளி

சூழ்தரு பாம்பரை யார்த்துச்

       சூலமோ டொண்மழு வேந்தித்

தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்

       தண்மதி யம்மய லேததும்ப

வீழ்தரு கங்கை கரந்தார்

       வேட்கள நன்னக ராரே


திருவொளி காணிய பேதுறு கின்ற

       திசைமுக னுந்திசை மேலளந்த

கருவரை யேந்திய மாலுங்

       கைதொழ நின்றது மல்லால்

அருவரை யொல்க எடுத்த வரக்கன்

       ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த

வெருவுற வூன்றிய பெம்மான்

       வேட்கள நன்னக ராரே


அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்

       யாதுமல் லாவுரை யேயுரைத்துப்

பொய்த்தவம் பேசுவ தல்லால்

       புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்

முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச

       மூரிவல் லானையின் ஈருரி போர்த்த

வித்தகர் வேத முதல்வர்

       வேட்கள நன்னக ராரே


விண்ணியன் மாடம் விளங்கொளி

       வீதி வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க

நண்ணிய சீர்வளர் காழி

       நற்றமிழ் ஞானசம் பந்தன்

பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து

       பேணிய வேட்கள மேல்மொழிந்த

பண்ணியல் பாடல் வல்லார்கள்

       பழியொடு பாவமி லாரே







இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்

--0--


1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.

பண் - தக்கராகம்

திருப்பாச்சிலாச்சிராமம்


துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்

       சுடர்ச்சடை சுற்றி முடித்துப்

பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ

       வாரிடமும் பலி தேர்வர்

அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

மணிவளர் கண்டரோ மங்கையை வாட

       மயல்செய்வ தோயிவர் மாண்பே


கலைபுனை மானுரி தோலுடை யாடை

       கனல்சுட ராலிவர் கண்கள்

தலையணி சென்னியர் தாரணி மார்பர்

       தம்மடி கள்ளிவ ரென்ன

அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

இலைபுனை வேலரோ ஏழையை வாட

       இடர்செய்வ தோயிவ ரீடே


வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை

       வேண்டுவர் பூண்பது வெண்ணூல்

நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக

       நண்ணுவர் நம்மை நயந்து

மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்

       சிதைசெய்வ தோவிவர் சீரே


கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக்

       கனல்தரு தூமதிக் கண்ணி

புனமலர் மாலை யணிந் தழகாய

       புனிதர் கொலாமிவ ரென்ன

வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

மனமலி மைந்தரோ மங்கையை வாட

       மயல்செய்வ தோவிவர் மாண்பே


மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி

       வளர்சடை மேற்புனல் வைத்து

மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை

       முதிரவோர் வாய்மூரி பாடி

ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

சாந்தணி மார்பரோ தையலை வாடச்

       சதுர்செய்வ தோவிவர் சார்வே


நீறுமெய்பூசி நிறைசடை தாழ

       நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி

ஆறது சூடி ஆடர வாட்டி

       யைவிரற் கோவண ஆடை

பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

ஏறது ஏறியர் ஏழையை வாட

       இடர்செய்வ தோவிவ ரீடே






பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ

       டாமைவெண் ணூல்புனை கொன்றை

கொங்கிள மாலை புனைந் தழகாய

       குழகர்கொ லாமிவ ரென்ன

அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்

       சதிர்செய்வ தோவிவர் சார்வே


ஏவலத் தால்விச யற்கருள் செய்து

       இராவண னையீ டழித்து

மூவரி லும்முத லாய்நடு வாய

       மூர்த்தியை யன்றி மொழியாள்

யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்

       சிதைசெய்வ தோவிவர் சேர்வே


மேலது நான்முக னெய்திய தில்லை

       கீழது சேவடி தன்னை

நீலது வண்ணனு மெய்திய தில்லை

       எனவிவர் நின்றது மல்லால்

ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்

       பழிசெய்வ தோவிவர் பண்பே


நாணொடு கூடிய சாயின ரேனும்

       நகுவ ரவரிரு போதும்

ஊணொடு கூடிய உட்குந் தகையார்

       உரைக ளவைகொள வேண்டா

ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி

       லாச்சிரா மத்துறை கின்ற

பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப்

       புனைசெய்வ தோவிவர் பொற்பே


அகமலி அன்பொடு தொண்டர் வணங்க

       ஆச்சிரா மத்துறை கின்ற

புகைமலி மாலை புனைந் தழகாய

       புனிதர்கொ லாமிவ ரென்ன

நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி

       நற்றமிழ் ஞானசம் பந்தன்

தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்

       சாரகி லாவினை தானே



முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்

மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில்


தீர்ந்தது.


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.





திருச்சிற்றம்பலம்

--0--
1.52 திருநெடுங்களம்

பண் - பழந்தக்கராகம்




மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்

குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த

நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்

தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை

மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்

நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத

என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த

பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்

நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்

அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா

தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்

நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்

தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்

தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்

நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்

அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்

நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்

மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்

ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த

நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை

அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்

என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்

நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே


வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்

சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்

கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்

நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே


வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்

தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்

துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே

நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே


நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்

சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்

நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன

பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்

--0--


1.54 திருஓத்தூர்

பண் - பழந்தக்கராகம்



திருவோத்தூர்


பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி

ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்

ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்

கூத்தீ ரும்ம குணங்களே


இடையீர் போகா இளமுலை யாளையோர்

புடையீ ரேபுள்ளி மானுரி

உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்

சடையீ ரேயும தாளே


உள்வேர் போல நொடிமையி னார்திறம்

கொள்வீ ரல்குலோர் கோவணம்

ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்

கள்வீ ரேயும காதலே


தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை

ஆட்டீ ரேயடி யார்வினை

ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்

நாட்டீ ரேயருள் நல்குமே


குழையார் காதீர் கொடுமழு வாட்படை

உழையாள் வீர்திரு வோத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்

அழையா மேயருள் நல்குமே


மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்

தக்கார் தம்மக்க ளீரென்

றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்

நக்கீ ரேயருள் நல்குமே


தாதார் கொன்றை தயங்கு முடியுடை

நாதா என்று நலம்புகழ்ந்

தோதா தாருள ரோதிரு வோத்தூர்

ஆதீ ரேயருள் நல்குமே


என்றா னிம்மலை யென்ற அரக்கனை

வென்றார் போலும் விரலினால்

ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்

என்றார் மேல்வினை யேகுமே


நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச்

சென்றார் போலுந் திசையெலாம்

ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்

நின்றீ ரேயுமை நேடியே


கார மண்கலிங் கத்துவ ராடையர்

தேரர் சொல்லவை தேறன்மின்

ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்

சீர வன்கழல் சேர்மினே


குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்

அரும்பு கொன்றை யடிகளைப்

பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்

விரும்பு வார்வினை வீடே


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வேதநாதர், தேவியார் - இளமுலைநாயகியம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--


1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி


திருவீழிமிழலை


வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசின் மிழலையீர், ஏச லில்லையே


இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

கறைகொள் காசினை, முறைமை நல்குமே


செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

பைகொள் அரவினீர், உய்ய நல்குமே


நீறு பூசினீர், ஏற தேறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே


காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

நாம மிழலையீர், சேமம் நல்குமே


பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்

அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே


மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே


அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்

பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே


அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

இயலும் மிழலையீர், பயனும் அருளுமே


பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே


காழி மாநகர், வாழி சம்பந்தன்

வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே



இது படிக்காசு சுவாமியருளியபோது வாட்டந்தீர ஓதியது.



திருச்சிற்றம்பலம்

--0--



1.98 திருச்சிராப்பள்ளி

பண் - குறிஞ்சி


திருச்சிராப்பள்ளி



நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே

றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே







கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்

செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி

வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ

பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே


மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்

செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்

சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்

எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே


துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்

சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்

கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்

பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே


கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ்

சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்

தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்

நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே


வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது

செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்

தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்

ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே


வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்

சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்

பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்

தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே


மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்

தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்

சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்

சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே


அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்

கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த

சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்

இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே


நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை

ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்

பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்

சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே


தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த

கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்

ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்

வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.




திருச்சிற்றம்பலம்

--0--


1.69 திரு அண்ணாமலை

பண் - தக்கேசி

திருவண்ணாமலை



பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்

மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்

தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்

ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே


மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்

நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்

வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி

அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே





ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்

ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்

ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்

ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே


இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்

தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்

பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்

அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே


உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்

செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்

பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்

அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே


எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்

நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்

கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத

அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே


வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு

பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்

முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்

அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே


மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்

நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்

திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட

அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே


தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை

மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு

கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்

றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே


தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்

பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்

வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்

அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே


அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை

நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்

சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று

வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே





திருச்சிற்றம்பலம்

--0--





3. 113 திருக்கழுமலம் திருஇயமகம்

பண் - பழம்பஞ்சுரம்





திருக்கழுமலம்





உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே

கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே

அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே

பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.



சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே

அதிரொளி சேர்திகி ரிப்படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்

மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையே

விதியினி லிட்ட விரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.



காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனே

பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்தன் உடலம் புதைத்தனனே

தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனே

போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.



மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே

மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியே

பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதே

வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே.



உடன்பயில் கின்றனன் மாதவனே யுறுபொறி காய்ந்திசை மாதவனே

திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனே

படங்கொள் அரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனே

தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே.



திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலே

இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழில் மானிடமே

மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையே

தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்கத ராயுறை சுந்தரரே.



ஓர்வரு கண்கள் இணைக்கயலே உமையவள் கண்கள் இணைக்கயலே

ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொ ளுதாசன னாகமதே

நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே

சேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே.



ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்கணி டந்தடி யப்பினனே

தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே

வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடுந கைத்தலையே

பூண்டனர் சேரலு மாபதியே புறவம் அமர்ந்த வுமாபதியே.



நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையே

உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதே

கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்ட கருங்களனே

மன்னி வரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே.





இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே

புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனே

இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரும் இராவணனே

கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.



கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே

மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே

நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையில் எய்தலரே

பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே.



பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே

வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே

கருதலில் இசைமுரல் தருமருளே கழுமலம் அமரிறை தருமருளே

மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.





திருச்சிற்றம்பலம்

--0--


அன்புடன்

    செல்வமுனி இல்லத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக