ஒளி பொருந்திய பாதை
அஞ்சாமை , நீடித்துழைக்கும் திறன், முயற்சி
அச்சம் ஒரு மாசு. பெரும் மாசுகளுள் ஒன்று . புவியில்
இறைவனது செயல் நிறைவேறவிடாமல் அதை அழித்துவிட
விரும்பும் தெய்வ விரோத சக்திகளிடமிருந்து நேரடியாக
வருகின்றவற்றுள் ஒன்று அச்சம். உண்மையாகவே, யோகம்
செய்ய விரும்புகிறவர்களின் முதல் வேலை தங்களுடைய முழு
பலத்தோடும் முழு நேர்மையோடும் நீடித்துழைக்கும் திறம்
முழுவதுடனும் அச்சத்தின் நிழல்கூட தங்கள் உணர்வில் இல்லாதபடி
அகற்றுவதாகவே இருக்கவேண்டும். யோகபாதையில்
செல்லவேண்டுமானால் ஒருவன் அச்ச்மற்றவனாக இருக்க
வேண்டும். அற்பமான , அருவருப்புண்டாக்குகிற , பலவீனமான ,
அச்சம் என்னும் சிறுமைக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது
எதற்கும் அஞ்சாத துணிவு, பூரணமான நேர்மை , இலாப நஷ்டக்
கணக்குப்பார்காத, ஒன்றையும் எதிர்பார்த்துச் செய்யாத சமர்ப்பணம்
பாதுகாப்புக் கிடைக்கும் என்று எண்ணி வைக்காத நம்பிக்கை ,
நிரூபணம் கேட்காத விசுவாசம் - யோக பாதையில் நடக்க தேவை
இதுவே. இது ஒன்றே உன்னை எல்லா ஆபத்துகளிலிருந்தும்
பாதுகாக்கும்
அச்சம் இறைவன் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது
ஒருவன் அஞ்சுவதற்கு காரணம் என்ன ?.
தன்னைப்பற்றி அதிகமாக நினைப்பதால் என்று சொல்லலாம்.
அச்சம் உண்டாவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது
தன்னுடைய பாதுகாப்பைப்பற்றி அளவுக்கு அதிகமாகக்
கவலைப்படுவது. அடுத்தபடியாக, தான் அறியாத ஒன்று ஒரு
வகையான கலக்கத்தைக் கொடுக்கிறது. அது உணர்வில் அச்சமாக
வெளிப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக , இறைவன் மீது
இறைவன் மீது இயல்பான ஒரு நம்பிக்கை வைக்கும் பழக்கம் இன்மை .
ஆழ்ந்து நோக்கினால் இதுவே உண்மையான காரணம் என்பது
புரியும். பரம்பொருள் என்று ஒன்று இருப்பதையே அறியாத மனிதர்கள்
இருக்கிறார்கள். அவர்களிடம் வேறுவிதமாக இப்படி சொல்லலாம் :
" உங்களுடைய நல்லூழில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை " என்றோ
" அருளைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது " என்றோ
சொல்லலாம். அதை நீ எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால் அதன் அடிப்படை விஷயம் இதுவே. எந்தச் சூழ்நிலையிலும்
உனக்கு எது மிகவும் நல்லதோ அதுவே நடக்கிறது என்கிற உணர்வு
உன்னிடம் எப்பொழுதும் இருக்குமானால், நீ அச்சம் கொள்ள மாட்டாய் .
அச்சத்தை வெல்லும் வழி
அச்சத்தை வெல்வதற்கு சிறந்த வழிகளில் ஒன்று நீ எதைக்கண்டு
அஞ்சுகிறாயோ அதைத் துணிவோடு எதிர்கொள்வதுதான். நீ எந்த
அபாயத்தைக் எண்ணி அஞ்சுகிறாயோ அதை நேருக்கு நேர்
சந்திக்கும்போது நீ அஞ்சுவதில்லை. யோகா நோக்கிளிருந்தும்
சுயக்கட்டுப்பாட்டின் நோக்கிலிருந்தும் அச்சத்தைப் போக்குவதற்கு
மருந்தாக சிபாரிசு செய்யப்படுவது இதுதான்.
உண்மையான அஞ்சாமை
அதன் ஆழ்ந்த பொருளில் உண்மையான அஞ்சாமை என்பது
எதையும், வாழ்க்கையில் நேரக்கூடிய எதையும், சிறிய விஷயங்கள்
முதல் பெரிய விஷயங்கள் வரை , சாதாரண அன்றாட வாழ்க்கைக்
குரிய விஷயங்கள் முதல் ஆன்மீக விஷயங்கள் வரை நடுக்கமின்றி
இதயம் படபடக்காமல் நரம்புகளில் பதட்டமின்றி, ஜீவனின் எந்தப்
பாகத்திலும் கிளர்ச்சியில்லாத முறையில் எதிர்கொள்ள முடிவதுதான் .
இடைவிடாத இறைவனின் சாநித்ய உணர்வுடன் , முற்றிலும் உன்னை
இறைவனுக்கு அர்பணித்து , ஜீவன் முழுவதும் அந்தச் சங்கற்பத்தில்
ஒருங்கிணைந்து , எல்லாவற்றையும் எதிர்கொள்ளவேண்டும்.
அப்படிச் செய்தால் நீ வாழ்வில் வெகு வேகமாக முன்னேறிச்
செல்லலாம். எதைவேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் .
நடுக்கமின்றி, அதிர்ச்சியின்றி எதிர்கொள்ள வேண்டும் என்றேன்.
ஒருவன் விசேஷ அருளுடன் பிறந்திருக்காவிட்டால் , பிறவியிலேயே
இத்தன்மையைப் பெற்றிருக்காவிட்டால் நீண்ட முயற்ச்சியின்
மூலமே இந்த நிலையை அடைய முடியும். பிறவியிலேயே அப்படி
இருப்பது மிக மிக அருமை .
--0--