செவ்வாய், 30 ஏப்ரல், 2013

Ever Existing Substance



பழம்பொருள்



மூச்சதனை உள்நிறுத்தி மூக்குநுனி பார்த்திருந்து

மூலப்பண் டாரமவன் முகவரியைத் தேர்ந்திருந்தேன்

மூலத்தின் மூலமவன் முகவரியில் நில்லாது

ஊனுயிரை ஊடறுத்து உலவுவதும் உணர்வேனோ


உணர்விட்ட உண்மைப்பொருள் உட்கலந்து உவகைதரும்

புனல்இட்ட மணியொளிர்ந்து புனல்ஒளிரும் நிறம்மாற்றும்

உடையிட்ட ஊடெனவும் பாவெனவும் நூல்வளரும்

அன்னவகை யப்பொருளின் இயல்புணர மாட்டேனோ


மாட்டாமை தனைமாற்றி மயக்கறுத்து  உய்வளிக்கும் 

இருப்பியக்கம் இரண்டினுக்கும் இடமளித்து உலகியற்றும் 

ஒண்பொருளின்  உயர்நோக்கை ஓங்கிவளர் அருட்திறத்தை

உளம்கொள்ள வொண்ணாது உன்மத்தன் ஆவேனோ


ஆவதுவும் அழிவதுவும் வாலறிவன் ஆக்கினையால்

வீழ்வதுவும் வாழ்வதுவும் வல்வினையின் ஊட்டுதலால்

பூப்பதுவும் பூத்தமலர்ப்  புனைவதுவும் அவன்தோளில்

என்றிருந்து தனிப்பொருளின் தண்ணடிகள் காண்பேனோ


கண்டுணர்ந்து உய்த்திருக்க கருவூலம் உள்ளிருக்க

தூய்மையினும்  தூய்மையென திகழ்கின்ற சோதியினை

கங்குபகல் காலமுற்றும் கலந்திருந்து களிப்பேனோ

கட்புலனில் அகப்பட்டு கதிமறந்து நிற்பேனோ


நின்று நிலைத்தப்பொருள் உயிர்த்துகளில் உலவுபொருள்

பற்று அறுத்தப்பொருள் பரஞ்ஞானம் தந்தபொருள்

கற்று தெளிந்தவர்க்கு கலவிகொள்ள உற்றபொருள்

வேற்று மனத்தினனாய் உற்றதனைத் தெளிவேனோ


தெளிந்துவளர் சித்தத்தில் ஜீவியப் பொருளெனவும்

விரிந்தநற் பேரறிவாய் விளைந்த நல்முத்தெனவும்

மலர்ந்தசெம் மனங்களிலே மாசற்ற சோதியுமாய்

விளங்குமவ் உயர்ப்பொருளை கற்றென்று தேர்வேனோ


தேர்ந்தநற் பொருளெனவே செப்பிடுவர்   அறம்நின்றோர்

சேர்ந்துறையும் காலமுற்றும் தீதறவே காத்துநிற்கும்

நேர்ந்தவெவ் வினையதனை வேரறுத்து நேர்படுத்தும்

சாரமாம் சித்பொருளை சார்ந்திருக்கப் பயில்வேனோ


பயின்றிங்கு பெற்றதெல்லாம் வானுலவும் பேரண்டம்

தெளிந்தவுயிர்  உணர்ந்ததுவோ நித்தியப் பேரமைதி

உழன்றுதினம் திரியுமனம் ஒன்றுமிடம் கண்டுணர்ந்து

சத்சித்து ஆனந்தத்தில் தனியிடத்து அமர்வேனோ


தனியமர்ந்து அறிந்தனரே நற்பொருளை நாடிநின்றோர்

திறம்வியந்து போற்றினரே அஃதுணர்த்தும் பெருநெறியை

சிரம்தாண்டி நின்றிலங்கும் சின்மயமாம் சித்பொருளை

புலன்தாண்டி உணர்வதற்கு உற்றநிலை வாய்த்திடுமோ


வாய்த்தவுயிர்த்    துகளதனில் உடற்கூற்றை முடிச்சிட்டு

தூயத்தபருப் பொருளதனில் சூக்குமங்கள் பிணைத்திருத்தி

வேய்த்தவிழுப் பொருளெனவே விளங்குகின்ற விண்ணரசை

காய்த்தமனம் கனிந்தேத்தி கதியுறுமோ என்னுயிர்மூச்சு




--0--







வியாழன், 18 ஏப்ரல், 2013

Some Portions from 'The Sunlit Path' - By Annai Mira Alfassa



ஒளி பொருந்திய பாதை

அஞ்சாமை , நீடித்துழைக்கும் திறன், முயற்சி


அச்சம் ஒரு மாசு. பெரும்  மாசுகளுள் ஒன்று . புவியில்
இறைவனது செயல் நிறைவேறவிடாமல் அதை அழித்துவிட
விரும்பும் தெய்வ விரோத சக்திகளிடமிருந்து நேரடியாக
வருகின்றவற்றுள் ஒன்று அச்சம். உண்மையாகவே, யோகம் 
          செய்ய விரும்புகிறவர்களின் முதல் வேலை தங்களுடைய முழு

          பலத்தோடும் முழு நேர்மையோடும் நீடித்துழைக்கும் திறம்

          முழுவதுடனும் அச்சத்தின் நிழல்கூட தங்கள் உணர்வில் இல்லாதபடி

          அகற்றுவதாகவே இருக்கவேண்டும். யோகபாதையில் 

          செல்லவேண்டுமானால்  ஒருவன் அச்ச்மற்றவனாக இருக்க

          வேண்டும். அற்பமான , அருவருப்புண்டாக்குகிற  , பலவீனமான ,

          அச்சம் என்னும் சிறுமைக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது


           எதற்கும் அஞ்சாத துணிவு, பூரணமான நேர்மை , இலாப நஷ்டக்

           கணக்குப்பார்காத, ஒன்றையும் எதிர்பார்த்துச்  செய்யாத சமர்ப்பணம்

           பாதுகாப்புக்  கிடைக்கும் என்று எண்ணி வைக்காத நம்பிக்கை ,

           நிரூபணம் கேட்காத விசுவாசம்  -  யோக பாதையில் நடக்க தேவை

           இதுவே. இது ஒன்றே உன்னை எல்லா ஆபத்துகளிலிருந்தும்

           பாதுகாக்கும்      

         
அச்சம் இறைவன் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது

           ஒருவன் அஞ்சுவதற்கு காரணம் என்ன ?.

           தன்னைப்பற்றி அதிகமாக நினைப்பதால் என்று சொல்லலாம்.

           அச்சம்  உண்டாவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது 

           தன்னுடைய பாதுகாப்பைப்பற்றி  அளவுக்கு அதிகமாகக்

           கவலைப்படுவது. அடுத்தபடியாக, தான் அறியாத ஒன்று ஒரு

           வகையான   கலக்கத்தைக் கொடுக்கிறது. அது உணர்வில் அச்சமாக 

           வெளிப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக , இறைவன் மீது 

           இறைவன் மீது இயல்பான ஒரு நம்பிக்கை வைக்கும் பழக்கம் இன்மை .

 
           ஆழ்ந்து நோக்கினால் இதுவே உண்மையான காரணம் என்பது

           புரியும். பரம்பொருள் என்று ஒன்று இருப்பதையே அறியாத மனிதர்கள் 

           இருக்கிறார்கள். அவர்களிடம் வேறுவிதமாக இப்படி சொல்லலாம் :

           " உங்களுடைய நல்லூழில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை " என்றோ 

           " அருளைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது " என்றோ 

           சொல்லலாம். அதை நீ எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

           ஆனால்   அதன் அடிப்படை விஷயம் இதுவே. எந்தச் சூழ்நிலையிலும் 

           உனக்கு எது மிகவும் நல்லதோ அதுவே நடக்கிறது என்கிற உணர்வு 

           உன்னிடம் எப்பொழுதும் இருக்குமானால், நீ அச்சம் கொள்ள மாட்டாய் . 


அச்சத்தை வெல்லும் வழி

            அச்சத்தை வெல்வதற்கு சிறந்த வழிகளில் ஒன்று நீ எதைக்கண்டு

            அஞ்சுகிறாயோ அதைத் துணிவோடு எதிர்கொள்வதுதான். நீ எந்த 

            அபாயத்தைக் எண்ணி  அஞ்சுகிறாயோ  அதை நேருக்கு நேர்

            சந்திக்கும்போது நீ அஞ்சுவதில்லை.  யோகா நோக்கிளிருந்தும்

            சுயக்கட்டுப்பாட்டின் நோக்கிலிருந்தும் அச்சத்தைப் போக்குவதற்கு

            மருந்தாக சிபாரிசு செய்யப்படுவது இதுதான்.


 உண்மையான அஞ்சாமை

            அதன் ஆழ்ந்த பொருளில் உண்மையான அஞ்சாமை என்பது

            எதையும், வாழ்க்கையில் நேரக்கூடிய  எதையும், சிறிய விஷயங்கள்

            முதல் பெரிய விஷயங்கள் வரை , சாதாரண அன்றாட வாழ்க்கைக்

            குரிய விஷயங்கள் முதல் ஆன்மீக விஷயங்கள் வரை நடுக்கமின்றி

            இதயம் படபடக்காமல் நரம்புகளில் பதட்டமின்றி, ஜீவனின் எந்தப்

            பாகத்திலும் கிளர்ச்சியில்லாத முறையில் எதிர்கொள்ள முடிவதுதான் .

            இடைவிடாத இறைவனின் சாநித்ய உணர்வுடன் , முற்றிலும் உன்னை

            இறைவனுக்கு அர்பணித்து , ஜீவன் முழுவதும் அந்தச் சங்கற்பத்தில்

            ஒருங்கிணைந்து , எல்லாவற்றையும் எதிர்கொள்ளவேண்டும்.

            அப்படிச் செய்தால் நீ வாழ்வில் வெகு வேகமாக முன்னேறிச்

            செல்லலாம். எதைவேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் . 

            நடுக்கமின்றி, அதிர்ச்சியின்றி எதிர்கொள்ள வேண்டும் என்றேன்.

            ஒருவன் விசேஷ அருளுடன் பிறந்திருக்காவிட்டால் , பிறவியிலேயே

            இத்தன்மையைப்  பெற்றிருக்காவிட்டால் நீண்ட முயற்ச்சியின்

             மூலமே இந்த நிலையை அடைய முடியும். பிறவியிலேயே அப்படி

            இருப்பது மிக மிக அருமை .  
            
     

--0--



வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

An advise to the heart

 

நெஞ்சினுக் குபதேசம்

ராகம் - ஹரிகாம்போதி                                                                  தாளம் - திஸ்ரம்

நடை - தனதனன  தனதனன தனதனன தனதனன


தந்தையின்  வித்தினொடு தாயவளின் சாகினுக்குள்

விந்தையென சினைசேர்த்து அணுவாக்கி   உயிரளித்து,

வந்துலவும் கிருமிகளின் செருவினின்று  பிழைக்கவைத்து,

முந்தைவினைப்  பகுத்தெடுத்து உயிர்த்துகளில் பதித்துவைத்து !


மாயையெனும் உடமைகொண்டு மாற்றமற உடலமைத்து

தாயவளின் உதரமதில் பத்துத்திங்கள் பார்த்திருந்து 

நேயமுடன் மண்ணளிக்கும்  பரம்பொருளைப் பற்றுவது

சாய்ந்தமனம் கொண்டவர்க்கு அத்தனைக்கு எளிதல்ல !



மேவவரும் புலனின்பம் முழுவதையும்  முறைதுறந்து 

தாவலிலா  தகவமைந்த  இதயமெனும்  வீடமைத்து  

ஆவலினால்  அலகுமிட்டு  தூவுணர்வு   மலர்தூவி   

மாவயிரம்  ஆங்கவனை  மாண்புடனே எழுப்புவித்து    !



நினைவதுவே தொழுகையென ஒன்றித்து ஒழுகிடுவாய் 

புனைந்துவளர் பக்குவத்தை பரமனவன் உணர்ந்தெழுவான்   

வினையகற்றி அகம்குளிர்ந்துன் அன்புவலை அகப்படுவான்

மனைவிளங்க  உயர்நிறுத்தி  வீடுறவே, கூட்டுவிப்பான் !


புல்நுனியில் பனியானால் பகலவனால் போக்குறுவாய்

கல்லிடையில் ஊற்றானால் நீர்நிலையாய்ப் பயன்தருவாய் 

வல்லாழிக் குள்வீழ்ந்த நன்மழையின் துளியானால் 

எல்லைமிகு கடல்கலந்து கடலெனவே பெயர்பெருவாய்   !


நீங்காத நின்மலனின் ஆக்கங்கள் அறிந்திடுவாய்  

பூங்கமலப் பொற்பாதம்  தாங்கிடுமிப்  புவனங்களை  

யாங்கணுமே நிறைந்திலங்கும்   ஆனந்த  வெள்ளமவன்  

பாங்குடனே  பைந்தமிழில் பண்கொண்டு  பரவிடுவாய்  !


ஒன்றெனவும், வேறெனவும், உடனெனவும் இருந்துஉனைச் 

சென்றேகும்  வகையருளும்  ஒண்பொருளை உண்மையனை

மன்றிலங்கும்  தொன்மையனை நொடிவிலக லில்லானை 

நன்றியுடன்   நேர்ந்திருப்பாய்  நேயமுடன் சார்ந்திருப்பாய் !


தஞ்சமென வந்தவர்க்கு தண்ணளிக்கும்  வள்ளலவன்

அஞ்சலற நித்தியத்தில்  நினையிருத்தி  நெறியருள்வான்

வஞ்சமறப் பருக்கோள்கள் பறந்துலவப்  பாதைசெயும்   

துஞ்சலிலாத்  தூயனுந்தன் உயிருறையும்  உயிராவான்   !


திண்ணமாயிம் மண்ணிலுண்டு வேண்டுவன அத்தனையும்

பண்டேயுன் உள்ளுறையும் பரமனவன் குணம்கொள்வாய் !

கண்ணுற்ற    உயிர்களைநீ   கருணையுடன் அறம்செய்வாய்   

எண்ணமதில் அசைவொழிந்து   பூரணனைப் போற்றிடுவாய்  


உருக்கொளும் உயிர்தொடங்கி பருக்கோளின் பான்மைவரைத்

திருக்குழகன் வனைந்தமைத்த வியாபகத்துள் வியாப்பியமே  

அருவாயும்   உருவாயும்   அருவுருவம்  அதுவாயும்  

பெருநெறியோ டவன்புரியும் திருநடமே யீங்கனைத்தும் !


வியாழன், 31 ஜனவரி, 2013

Sivan worshiped by Owvaiyaar

சிவனைப்பாடும் ஔவைபிராட்டி 

1. ஆத்திசூடி


30. அரனை மறவேல்.

2. கொன்றை வேந்தன்

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.

80. மோனம் என்பது ஞான வரம்பு.

89. வைகல் தோறும் தெய்வம் தொழு.

4. நல்வழி


சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும். 15



நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்

ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்

உடன்பிறப் பில்லா உடம்புபாழ்  பாழே

மடக்கொடி இல்லா மனை. 24



ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல். 27



வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்

கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே

விண்ணுறுவார்க் கில்லை விதி. 37



(உலகியபில் நின்றோர்க்கு வினை அடுமே அல்லது இறைவன் திருவடி பற்றி விண்ணுறுவார்க்கு இல்லை விதி என்றவாறூ)



நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்

அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை

தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்

போனவா தேடும் பொருள். 38



தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர். 40