வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

An advise to the heart

 

நெஞ்சினுக் குபதேசம்

ராகம் - ஹரிகாம்போதி                                                                  தாளம் - திஸ்ரம்

நடை - தனதனன  தனதனன தனதனன தனதனன


தந்தையின்  வித்தினொடு தாயவளின் சாகினுக்குள்

விந்தையென சினைசேர்த்து அணுவாக்கி   உயிரளித்து,

வந்துலவும் கிருமிகளின் செருவினின்று  பிழைக்கவைத்து,

முந்தைவினைப்  பகுத்தெடுத்து உயிர்த்துகளில் பதித்துவைத்து !


மாயையெனும் உடமைகொண்டு மாற்றமற உடலமைத்து

தாயவளின் உதரமதில் பத்துத்திங்கள் பார்த்திருந்து 

நேயமுடன் மண்ணளிக்கும்  பரம்பொருளைப் பற்றுவது

சாய்ந்தமனம் கொண்டவர்க்கு அத்தனைக்கு எளிதல்ல !



மேவவரும் புலனின்பம் முழுவதையும்  முறைதுறந்து 

தாவலிலா  தகவமைந்த  இதயமெனும்  வீடமைத்து  

ஆவலினால்  அலகுமிட்டு  தூவுணர்வு   மலர்தூவி   

மாவயிரம்  ஆங்கவனை  மாண்புடனே எழுப்புவித்து    !



நினைவதுவே தொழுகையென ஒன்றித்து ஒழுகிடுவாய் 

புனைந்துவளர் பக்குவத்தை பரமனவன் உணர்ந்தெழுவான்   

வினையகற்றி அகம்குளிர்ந்துன் அன்புவலை அகப்படுவான்

மனைவிளங்க  உயர்நிறுத்தி  வீடுறவே, கூட்டுவிப்பான் !


புல்நுனியில் பனியானால் பகலவனால் போக்குறுவாய்

கல்லிடையில் ஊற்றானால் நீர்நிலையாய்ப் பயன்தருவாய் 

வல்லாழிக் குள்வீழ்ந்த நன்மழையின் துளியானால் 

எல்லைமிகு கடல்கலந்து கடலெனவே பெயர்பெருவாய்   !


நீங்காத நின்மலனின் ஆக்கங்கள் அறிந்திடுவாய்  

பூங்கமலப் பொற்பாதம்  தாங்கிடுமிப்  புவனங்களை  

யாங்கணுமே நிறைந்திலங்கும்   ஆனந்த  வெள்ளமவன்  

பாங்குடனே  பைந்தமிழில் பண்கொண்டு  பரவிடுவாய்  !


ஒன்றெனவும், வேறெனவும், உடனெனவும் இருந்துஉனைச் 

சென்றேகும்  வகையருளும்  ஒண்பொருளை உண்மையனை

மன்றிலங்கும்  தொன்மையனை நொடிவிலக லில்லானை 

நன்றியுடன்   நேர்ந்திருப்பாய்  நேயமுடன் சார்ந்திருப்பாய் !


தஞ்சமென வந்தவர்க்கு தண்ணளிக்கும்  வள்ளலவன்

அஞ்சலற நித்தியத்தில்  நினையிருத்தி  நெறியருள்வான்

வஞ்சமறப் பருக்கோள்கள் பறந்துலவப்  பாதைசெயும்   

துஞ்சலிலாத்  தூயனுந்தன் உயிருறையும்  உயிராவான்   !


திண்ணமாயிம் மண்ணிலுண்டு வேண்டுவன அத்தனையும்

பண்டேயுன் உள்ளுறையும் பரமனவன் குணம்கொள்வாய் !

கண்ணுற்ற    உயிர்களைநீ   கருணையுடன் அறம்செய்வாய்   

எண்ணமதில் அசைவொழிந்து   பூரணனைப் போற்றிடுவாய்  


உருக்கொளும் உயிர்தொடங்கி பருக்கோளின் பான்மைவரைத்

திருக்குழகன் வனைந்தமைத்த வியாபகத்துள் வியாப்பியமே  

அருவாயும்   உருவாயும்   அருவுருவம்  அதுவாயும்  

பெருநெறியோ டவன்புரியும் திருநடமே யீங்கனைத்தும் !